பாவம் பைரவி இப்படி நடக்குமென்று அவள் நினைக்க கூடவில்லை .மனம் நிறைய சேர்த்து வைத்த சந்தோசங்களும் கனவுகளும் எதிர்பார்ப்புகளும் நேற்று நடந்து முடிந்த அந்த சம்பவத்தால் அப்படியே நொறுங்கி போனது.
எங்கே அவள் அதிகம் நம்பிக்கை வைத்திருந்தாளோ யாருக்காக தன் பெற்றோரின் கனவுகளை ஒதுக்கிவிட்டு அவனே தன் உலகம் என்று எண்ணி இருந்தாளோ இன்று அவனே அவளிற்கு அன்னியனாகிப் போனான்.

நினைக்க நினைக்க அவளால் கண்ணீரை கட்டுப்படுத்த முடியாமல் போனது. பைரவி ஏழை குடும்பத்தில் பிறந்தவள்.எனினும் குடும்ப்பதோர் பாசத்தை பொழிந்து அவளை வளர்த்தனர்.
படிப்பிலும் அவள் சுட்டி. நீண்ட கண்களும் அடர்ந்த கூந்தலும் அவள் அழகிற்கு மேலும் அழகூட்டின .
பார்ப்பதற்கு ஒரு தேவதை போல் இருந்த அவளிற்கு பல இடங்களில் இருந்தும் வரன்கள் வரத் தொடங்கின.
சீதனம் எதுவும் இல்லாமல் அவளை மனைவியாக்க பலர் தயாரhய் இருந்தனர். அனால் எந்த வாழ்க்கையையும் ஏற்றுக்கொள்ள அவள் தயாராய் இல்லை என்பதுதான் அவளது துரதிஸ்ட்டம்.
கண்ணன் அவளோடு கூடப் படித்தவன். படிப்பில் இவளை விடக் குறைவாக இருந்தாலும் பழகுவதற்கு நல்ல பண்புடையவனாக இருந்தான்.
பள்ளியில் நட்பாக தொடங்கிய அறிமுகம் நாளடைவில் காதலாக உருமாறியது. இருவர் உள்ளங்களிலும் காதல் பரிமாறப்பட்டபோது காலம் அவர்களை தற்காலிகமாக பிரித்து வைத்தது.
நாட்டு நிலை காரணமாக கண்ணன் வெளிநாடு ஒன்றிற்கு அகதியாக குடி பெயர்ந்தான். கண்ணீரோடு இருவரும் விடை பெற்று கொண்டனர்.
''பைரவி நீ அழாதே எத்தனை ஜென்மம் எடுத்தாலும் யார் தடுத்தாலும் நீதான் என் மனைவி ''
இதுதான் அவன் போகும்போது சொன்ன வரிகள்.
நேரில் சந்திக்காவிட்டாலும் கடிதமூலமும் தொலைபேசி மூலமும் அவர்கள் காதல் தொடர்ந்து வளர்ந்தது. முகங்கள் சந்திக்கவிட்டலும் நாளும் வார்த்தைகள் சந்தித்து கொண்டன. மொழிகள் உறவாடிக் கொண்டன.
காலம் யாருக்காகவும் காத்திராமல் வேகமாக நகர்ந்து கொண்டிருந்தது. பைரவியும் இருபத்தாறு வயதை கடந்திருந்தாள். வீட்டினரின் எதிர்ப்பையும் மீறி அவள் கண்ணனுக்காக காத்திருந்தாள். தாயின் கண்ணீராலும் தந்தையின் கண்டிப்பாலும் அண்ணனின் பாசத்தாலும் கூட அவள் வைராக்கியத்தை மாற்ற முடியாமல் போனது.
அன்றும் வழமைபோல் தொலைபேசி அழைப்பு வந்தது. பேசியவளிற்கு ஒரே சந்தோசம்.
''பைரவி விசா கிடைத்து விட்டது வாற மாசம் வாறன் ''
அவன் சொன்ன வார்த்தைகள் அவளை கனவுலகத்திற்கு அழைத்து சென்றது. ஒரு மாதமும் ஒரு வாரம் போல் கடந்து போனது. அவன் சொன்ன நாளும் வந்தது. ஆனால் அவன் ......அவளை பார்க்க வரவேயில்லை. பக்கத்தில் உள்ளவர்கள் அவன் வந்து விட்டதாக பேசிக்கொண்டார்கள்.
''பாவம் அவரிற்கு வேலை போல எல்லா வேலையையும் முடித்துக்கொண்டு
ஒரு நல்ல முடிவோடு வருவார். பிறகென்ன அடத்து எங்கட திருமணம்தான். என்று தன்னை தானே சமாதானப் படுத்திக் கொண்டாள். நாட்கள் ஓடி சென்றன. ஆனால் கண்ணன் மட்டும் வரவேயில்லை. கண்ணன் வீட்டிற்கு செல்ல பைரவிக்கும் அனுமதி கிடைக்கவில்லை.
அவளின் மனம் மட்டும் கண்ணனுக்காக ஏங்கிக் கொண்டே இருந்தது. அவனை பார்க்க வேண்டும் என்று மனம் துடித்தது. ஒவ்வொரு நாளும் ஒரு யுகம் போல் கழிந்தது.
அன்று மாலை நான்கு மணி இருக்கும் படலை திறக்கும் ஓசை கேட்டு ஓடி சென்றவளிற்கு ஒரே அதிர்ச்சி. அங்கே கண்ணன் நின்றுகொண்டிருந்தான். பைரவிக்கு கடவுளே நேரில் வந்த சந்தோசம்.
''வாங்கோ வங்கோ ''
என்று வரவேற்றாள் கண்ணனின் முகத்தில் எந்த சலனமோ சந்தோசமோ இல்லை .அவன் வந்ததும் வராததுமாக ஒரு பத்திரிகையை அவளிடம் கொடுத்தான். அதை பிரித்து பர்ர்த்தவளிற்கு வானமே இடிந்து தலையில் விழுந்தது போன்ற வலி....
அப்படியே தரையிலிருந்துவிட்டாள்.
அது அவனது திருமண பத்திரிகை.
அவள் தன் நிலைக்கு திரும்பு முன்னே அவன் தொடர்ந்தான்.
'' பைரவி இது எங்கட உறவுக்காரப் பெண்.அந்தஸ்தில் எங்களை விட உயர்ந்த இடத்தில் உள்ளவர்கள். அம்மா நான் வர முதலே இதை நிச்சயம் செய்து விட்டார்கள். என்னால் பெற்றோரின் பேச்சை மீற முடியவில்லை. தப்பென்றால் என்னை மன்னித்து விடு.முடிந்தால் எங்கள் திருமணத்திற்கு வந்துவிட்டுபோ"
என்று கூறிவிட்டு சென்று விட்டான். இதை கேட்டு துடித்தாள் பைரவி. அவளால் தன் காதுகளையே நம்பமுடியவில்லை. தன் கண்ணனா இப்படி பேசியது? நினைக்க நினைக்க அவள் மனம் துடித்தது.
யாரிற்காக தன் பெற்றோரை துடிக்க வைத்தாளோ இன்று அவன் அவனது பெற்றோருக்காக தன்னையே தூக்கி எறிந்து விட்டானே என்று எண்ணும்போது இதயமே நின்றுவிடும் போல் இருந்து.
இரவு முழுக்க அழுதும் அவள் சோகம் மறைந்து விடவில்லை. மனம் இன்னும் பாரமாகவே இருந்தது.
அவனால் என்னை மறக்க முடியும் என்றால் என்னாலும் அவனை மறந்து வாழ முடியும் என மனம் சொன்னாலும் அதை செயற்படுத்துவது கடினமானதாகவே இருந்தது.
பலவாறு மனதை குழப்பி கொண்டிருந்தவளிற்கு அம்மாவின் அழைப்பு சுய நினைவிற்கு அவளை இழுத்து வந்தது.
''பாவம் அம்மா யாரோ ஒருவனுக்காக என் அம்மாவை வேதனைப் படவைத்து விட்டேனே ''
என்று மனம் ஏங்கியது.
சரி என் விதி எப்படி நடந்து விட்டது. மறக்க முடியாததென்று இவ்வுலகில் எதுவுமே இல்லை. காலம் எந்த காயத்தையும் மாற்ற கூடியது. நிகழ்காலத்தில் நடக்கும் நல்ல சம்பவங்களும் எதிர் காலத்தில் நடக்க இருக்கின்ற புதிய அனுபவங்களும் கடந்த கால கசப்பான உணர்வுகளை மறக்க செய்துவிடும்.
அப்போது நான் மீண்டும் ஒரு புதுப் பைரவியாக மாறி விடுவேன் என்ற நம்பிக்கையுடன் புதிய விடியலை எதிர்கொண்டு வரவேற்க தயாரானாள்......