வியாழன், 4 மார்ச், 2010

பெண்ணே உனக்கே உனக்காய்
























அடங்கி அடங்கி
ஆண்டாண்டு காலமாய்
அடுப்பங்கரையே உன் உலகமென்று
முடங்கிக் கிடந்தது போதும்.
புதுமைகள் அறிந்து
பழமைகள் களைந்து
பாரதி கண்ட புதுமைப் பெண்ணாய்
சாதனை படைக்க - பெண்ணே
துணிந்து நீயும் எழுந்து வா

நதியென்றும் மலரென்றும்
நிலவென்றும் அமுதென்றும்
போகம் தரும் காதற் பொருளாய்
கவிஞர் உன்னைக் கண்டது போதும்
சரித்திரம் படைக்கும் புயலாய்
அறியாமை களையும் தீயாய்
அகிலம் உனைக்காண
அடங்காத வேகத்துடன் - பெண்ணே
துணிந்து நீயும் எழுந்து வா

பின் தூங்கி முன்னெழுந்து
தலை கோதி அடி வருடி
அருகிருந்து தூங்க வைத்து
தேவைகள் அறிந்து சேவைகள் செய்யும்
துணைவியாய் மட்டும் - நீ
வாழ்ந்தது போதும்
அடக்கு முறைகளை உடைத்து எறிந்து
அடிமை வாழ்வின் சங்கிலி அறுத்து
அறிவியல் உலகின் சாதனைப் பெண்ணாய்
உலகம் உனைக்காண - பெண்ணே
துணிந்து நீயும் எழுந்து
வா