செவ்வாய், 22 டிசம்பர், 2009

இப்படியும் ஒரு காதல்


பாவம் பைரவி இப்படி நடக்குமென்று அவள் நினைக்க கூடவில்லை .மனம் நிறைய சேர்த்து வைத்த சந்தோசங்களும் கனவுகளும் எதிர்பார்ப்புகளும் நேற்று நடந்து முடிந்த அந்த சம்பவத்தால் அப்படியே நொறுங்கி போனது.


எங்கே அவள் அதிகம் நம்பிக்கை வைத்திருந்தாளோ யாருக்காக தன் பெற்றோரின் கனவுகளை ஒதுக்கிவிட்டு அவனே தன் உலகம் என்று எண்ணி இருந்தாளோ இன்று அவனே அவளிற்கு அன்னியனாகிப் போனான்.
நினைக்க நினைக்க அவளால் கண்ணீரை கட்டுப்படுத்த முடியாமல் போனது. பைரவி ஏழை குடும்பத்தில் பிறந்தவள்.எனினும் குடும்ப்பதோர் பாசத்தை பொழிந்து அவளை வளர்த்தனர்.


படிப்பிலும் அவள் சுட்டி. நீண்ட கண்களும் அடர்ந்த கூந்தலும் அவள் அழகிற்கு மேலும் அழகூட்டின .
பார்ப்பதற்கு ஒரு தேவதை போல் இருந்த அவளிற்கு பல இடங்களில் இருந்தும் வரன்கள் வரத் தொடங்கின.


சீதனம் எதுவும் இல்லாமல் அவளை மனைவியாக்க பலர் தயாரhய் இருந்தனர். அனால் எந்த வாழ்க்கையையும் ஏற்றுக்கொள்ள அவள் தயாராய் இல்லை என்பதுதான் அவளது துரதிஸ்ட்டம்.


கண்ணன் அவளோடு கூடப் படித்தவன். படிப்பில் இவளை விடக் குறைவாக இருந்தாலும் பழகுவதற்கு நல்ல பண்புடையவனாக இருந்தான்.


பள்ளியில் நட்பாக தொடங்கிய அறிமுகம் நாளடைவில் காதலாக உருமாறியது. இருவர் உள்ளங்களிலும் காதல் பரிமாறப்பட்டபோது காலம் அவர்களை தற்காலிகமாக பிரித்து வைத்தது.


நாட்டு நிலை காரணமாக கண்ணன் வெளிநாடு ஒன்றிற்கு அகதியாக குடி பெயர்ந்தான். கண்ணீரோடு இருவரும் விடை பெற்று கொண்டனர்.

''பைரவி நீ அழாதே எத்தனை ஜென்மம் எடுத்தாலும் யார் தடுத்தாலும் நீதான் என் மனைவி ''

இதுதான் அவன் போகும்போது சொன்ன வரிகள்.


நேரில் சந்திக்காவிட்டாலும் கடிதமூலமும் தொலைபேசி மூலமும் அவர்கள் காதல் தொடர்ந்து வளர்ந்தது. முகங்கள் சந்திக்கவிட்டலும் நாளும் வார்த்தைகள் சந்தித்து கொண்டன. மொழிகள் உறவாடிக் கொண்டன.


காலம் யாருக்காகவும் காத்திராமல் வேகமாக நகர்ந்து கொண்டிருந்தது. பைரவியும் இருபத்தாறு வயதை கடந்திருந்தாள். வீட்டினரின் எதிர்ப்பையும் மீறி அவள் கண்ணனுக்காக காத்திருந்தாள். தாயின் கண்ணீராலும் தந்தையின் கண்டிப்பாலும் அண்ணனின் பாசத்தாலும் கூட அவள் வைராக்கியத்தை மாற்ற முடியாமல் போனது.


அன்றும் வழமைபோல் தொலைபேசி அழைப்பு வந்தது. பேசியவளிற்கு ஒரே சந்தோசம்.


''பைரவி விசா கிடைத்து விட்டது வாற மாசம் வாறன் ''


அவன் சொன்ன வார்த்தைகள் அவளை கனவுலகத்திற்கு அழைத்து சென்றது. ஒரு மாதமும் ஒரு வாரம் போல் கடந்து போனது. அவன் சொன்ன நாளும் வந்தது. ஆனால் அவன் ......அவளை பார்க்க வரவேயில்லை. பக்கத்தில் உள்ளவர்கள் அவன் வந்து விட்டதாக பேசிக்கொண்டார்கள்.


''பாவம் அவரிற்கு வேலை போல எல்லா வேலையையும் முடித்துக்கொண்டு


ஒரு நல்ல முடிவோடு வருவார். பிறகென்ன அடத்து எங்கட திருமணம்தான். என்று தன்னை தானே சமாதானப் படுத்திக் கொண்டாள். நாட்கள் ஓடி சென்றன. ஆனால் கண்ணன் மட்டும் வரவேயில்லை. கண்ணன் வீட்டிற்கு செல்ல பைரவிக்கும் அனுமதி கிடைக்கவில்லை.


அவளின் மனம் மட்டும் கண்ணனுக்காக ஏங்கிக் கொண்டே இருந்தது. அவனை பார்க்க வேண்டும் என்று மனம் துடித்தது. ஒவ்வொரு நாளும் ஒரு யுகம் போல் கழிந்தது.


அன்று மாலை நான்கு மணி இருக்கும் படலை திறக்கும் ஓசை கேட்டு ஓடி சென்றவளிற்கு ஒரே அதிர்ச்சி. அங்கே கண்ணன் நின்றுகொண்டிருந்தான். பைரவிக்கு கடவுளே நேரில் வந்த சந்தோசம்.


''வாங்கோ வங்கோ ''


என்று வரவேற்றாள் கண்ணனின் முகத்தில் எந்த சலனமோ சந்தோசமோ இல்லை .அவன் வந்ததும் வராததுமாக ஒரு பத்திரிகையை அவளிடம் கொடுத்தான். அதை பிரித்து பர்ர்த்தவளிற்கு வானமே இடிந்து தலையில் விழுந்தது போன்ற வலி....

அப்படியே தரையிலிருந்துவிட்டாள்.

அது அவனது திருமண பத்திரிகை.


அவள் தன் நிலைக்கு திரும்பு முன்னே அவன் தொடர்ந்தான்.


'' பைரவி இது எங்கட உறவுக்காரப் பெண்.அந்தஸ்தில் எங்களை விட உயர்ந்த இடத்தில் உள்ளவர்கள். அம்மா நான் வர முதலே இதை நிச்சயம் செய்து விட்டார்கள். என்னால் பெற்றோரின் பேச்சை மீற முடியவில்லை. தப்பென்றால் என்னை மன்னித்து விடு.முடிந்தால் எங்கள் திருமணத்திற்கு வந்துவிட்டுபோ"


என்று கூறிவிட்டு சென்று விட்டான். இதை கேட்டு துடித்தாள் பைரவி. அவளால் தன் காதுகளையே நம்பமுடியவில்லை. தன் கண்ணனா இப்படி பேசியது? நினைக்க நினைக்க அவள் மனம் துடித்தது.


யாரிற்காக தன் பெற்றோரை துடிக்க வைத்தாளோ இன்று அவன் அவனது பெற்றோருக்காக தன்னையே தூக்கி எறிந்து விட்டானே என்று எண்ணும்போது இதயமே நின்றுவிடும் போல் இருந்து.


இரவு முழுக்க அழுதும் அவள் சோகம் மறைந்து விடவில்லை. மனம் இன்னும் பாரமாகவே இருந்தது.


அவனால் என்னை மறக்க முடியும் என்றால் என்னாலும் அவனை மறந்து வாழ முடியும் என மனம் சொன்னாலும் அதை செயற்படுத்துவது கடினமானதாகவே இருந்தது.


பலவாறு மனதை குழப்பி கொண்டிருந்தவளிற்கு அம்மாவின் அழைப்பு சுய நினைவிற்கு அவளை இழுத்து வந்தது.


''பாவம் அம்மா யாரோ ஒருவனுக்காக என் அம்மாவை வேதனைப் படவைத்து விட்டேனே ''

என்று மனம் ஏங்கியது.


சரி என் விதி எப்படி நடந்து விட்டது. மறக்க முடியாததென்று இவ்வுலகில் எதுவுமே இல்லை. காலம் எந்த காயத்தையும் மாற்ற கூடியது. நிகழ்காலத்தில் நடக்கும் நல்ல சம்பவங்களும் எதிர் காலத்தில் நடக்க இருக்கின்ற புதிய அனுபவங்களும் கடந்த கால கசப்பான உணர்வுகளை மறக்க செய்துவிடும்.


அப்போது நான் மீண்டும் ஒரு புதுப் பைரவியாக மாறி விடுவேன் என்ற நம்பிக்கையுடன் புதிய விடியலை எதிர்கொண்டு வரவேற்க தயாரானாள்......


புதன், 16 டிசம்பர், 2009

தாய்மை


உன் பாதங்களால்
என் நெஞ்சில் உதைந்தபோது
மகிழ்ச்சியில் என் மனம்
துள்ளிக் குதித்தது.

கோபத்தில் நான் உன்னை
அடித்த போது
உனக்குப் பதிலாக
என்மனம் தானே அழுகிறது.சனி, 12 டிசம்பர், 2009

செல்லமடி நீ எனக்கு


யாரைத் தன் வாழ் நாளில் இனிச் சந்திக்கக் கூடாது என்று எண்ணி இருந்தாளோயாருக்காகத் தன் ஊரையும் உறவுகளையும் தூக்கி எறிந்து விட்டு தனிமையை நாடி வந்தாளோயாருடைய வாழ்க்கையில் சந்தோச சாரல் வீச வேண்டும் என்பதற்காக தன் மனதையே கல்லாக்கிக் கொண்டுஒரு பிரமச்சாரி வாழ்க்கையைத் தேர்ந்தெடுத்தாளோ இன்று அவனையே சந்திக்க வேண்டியதாயிற்று.

ஏறத்தாள ஒரு வருடம் அவள் போராடியதெல்லாம் அவனைப் பார்த்த அந்தக் கணத்திலேயே வீணாகிப் போயிற்று.

சுதன் அவளை இந்நிலையில் எதிர் பார்க்கவில்லைத்தான்… அவள் தன்னை மறந்து வாழ்ந்தாலும் எங்கோ ஓர் மூலையில் நல்லபடியாய் வாழ்கிறாள் என்றுதான் என்ணியிருந்தான்.

அவள் தனக்குத் துரோகம் செய்திருக்க மாட்டாள் என்பது அவனுக்கு நன்றாகத் தெரிந்தாலும் ஏன் தன்னை இப்படித் தவிக்க விட்டு போனாள் என்பது தான் அவனுக்குப் புரியாத புதிராக இருந்தது.

அவளது பெற்றோரும் உறவுகளும் அவளைப் பற்றிய எந்தத் தகவலையும் சொல்ல முன்வராததால் அவளைத் தேடி எங்கெல்லாமோ அலைய வேண்டியதாயிற்று.ஒரு வருடத்துக்கு மேலாக அவளைத் தேடி அலைந்தவன் இன்று எதிர் பாராத விதமாக நேருக்கு நேராக அவளைச் சந்தித்த போது எதுவும் பேச முடியாது ஊமையாகி விட்டான்.அவளது கோலத்தைப் பார்த்ததும் வார்த்தைகள் கூட மௌனித்துப் போனது.

கண்ணீர் மட்டுமே ஓடிக் கொண்டீருந்தது.பிரீத்தியும் சுதனும்
வேறுவேறு
பிரதேசத்தவர்களாக இருந்த போதும் இடப்பெயர்வு இருவரையும் ஒரே இடத்தில் இணைத்து வைத்தது.

கண்ணீர் மட்டுமே ஓடிக் கொண்டீருந்தது.பிரீத்தியும் சுதனும் வௌ;வேறு பிரதேசத்தவர்களாக இருந்த போதும் இடப்பெயர்வு இருவரையும் ஒரே இடத்தில் இணைத்து வைத்தது.

இரு குடும்பங்களுக்கு இடையில் ஆரம்பித்த நல்ல நட்பு நாளடைவில் இருவருக்குள்ளும் காதலாக பரிணாமம் பெற்றது.

இருவரும் வெளியில் அடிக்கடி சந்தித்துப் பேசிக் கொண்டனர். காதல் கடிதங்களைப் பரிமாறிக் கொண்டனர்.

ஆனால் வீட்டில் தாம் இருவரும் பேசிக் கொள்வதே இல்லை என்பது போல பெற்றோர்கள் முன்னிலையில் இருவரும் ஒதுங்கியொதுங்கி நடந்து கொண்டனர்.

ஆனால் இவர்களின் காதல் பற்றி ஊரில் உள்ள பலரும் பலவாறு பேசிக் கொண்டனர்.

அப்போதுதான் பிரீத்தியின் தந்தையின் காதுக்கும் இச் செய்தி எட்டியது.பிரீத்தியின் தந்தை இருவரையும் பலமுறை கண்டித்துப் பார்த்தார் ஆனால் அதன் பின்புதான் இருவரும் தம் காதலில் இன்னும் தீவிரமாக இருந்தனர்.தன் கண்டிப்பு தன் பிள்ளையை தப்பான பாதைக்கு கொண்டுபோய் விடுமோ என்ற பயம் அவரைத் தொற்றிக் கொண்டது.

ஊரவர்கள் இவர்களைப்பற்றிக் கேலி பேசுமுன் தாங்கள் கூடிப் பேசி ஒரு முடிவை எடுக்க இரு குடும்பமும் முன் வந்தன.

இவர்களுடைய விருப்பப்படி இருவரது படிப்பும் முடிந்து சுதன் தன் சொந்தக் காலில் நிற்கத் தொடங்கியதும் இருவருக்கும் திருமணம் செய்வது என முடிவெடுக்கப்பட்டது.

சுதனும் பிரீத்தியும் காதல் சிட்டுக்களாக சந்தோச வானில் பறந்தனர். எனினும் தங்கள் காதல் தமது கல்வியை எந்த விதத்திலும் பாதிக்காமல் பார்த்துக் கொண்டனர்.

அந்த ஆண்டே சுதன் மருத்துவத் துறைக்குத் தெரிவானான். பிரீத்திக்கு பல்கலைக்கழக அனுமதி கிடைக்கவில்லை.

ஆனால் ஆசிரியர் நியமனம் பெற்றாள்.சுதன் தன் படிப்புக்காகப் பெற்றோருடன் யாழ்ப்பாணம் சென்று விட்டான்.

அதுதான் அவனுடைய சொந்த ஊரும் கூட.சுதனுக்கு பிரீத்தியை தன்னுடன் அழைத்துப் போகவே விருப்பம்.

ஆனால் தாலி கட்டாமல் அவளை அவனுடன் அனுப்புவதில்லை என்பதில் அவளது தந்தை உறுதியாக இருந்தார்.

அவரது கட்டளை நியாயமானதும் கூட.பிரீத்தியால் அவனது பிரிவைத் தாங்க முடியவில்லை.
பார்க்கும் இடமெல்லாம் அவனது விம்பமாகவே தெரிந்தது. எப்படித்தான் அவனைப் பிரிந்திருக்கும் இந்த வருடங்கள் கழியப் போகின்றனவோ எனப் பயமாகவும் இருந்தது.

ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு ஆண்டாக கழிந்து விடக் கூடாதா என மனம் ஏங்கித் தவித்தது. அவனிடம் இருந்து வரும் காதல் மடல்களே அவளது வாழ்வுக்கு உயிரூட்டிக் கொண்டிருந்தன.

ஒருவாறு மூன்று வருடங்கள் கடந்தோடின… அதற்குள் ஐந்து முறை பிரீத்தியை வந்து பார்த்துவிட்டு போயிருந்தான் சுதன்.அன்றும் வழமை போல் பாடசாலைக்குச் செல்லும் போதுதான் அந்தச் சம்பவம் நடந்தது.

திடீரென நிகழ்ந்த எறிகணை வீச்சில் பிரீத்தி தனது ஒரு காலை இழந்திருந்தாள்.நடந்து முடிந்த இந்த நிகழ்வு அவளது வாழ்க்கையையே முடித்து விட்டதாக அவள் எண்ணினாள்.

தன்னையே தன்னால் பார்த்துக் கொள்ள முடியாத போது இன்னொரு புதிய வாழ்க்கை தனக்கு எதுக்கு என எண்ணினாள்.பாவம் சுதன் ஒரு நொண்டிப் பெண்ணை மனைவியாக்கி காலம் முழுக்க சுமை தாங்கியாய் வாழக் கூடாது.

அவர் எங்காவது சந்தோசமாய் வாழட்டும் அதுதான் நான் அவருக்குச் செய்யும் நன்றியுங் கூட என முடிவெடுத்தாள்.

பெற்றோர் கூறிய எந்த அறிவுரைகளையும் ஏற்க அவள் தயாராய் இருக்கவில்லை.

தனது நிலை பற்றியும் தான் எங்கிருக்கிறேன் என்பது பற்றியும் சுதனிடம் எதுவும் கூறக்கூடாதென பெற்றோரிடம் சத்தியம் வாங்கிக் கொண்டாள்.

இதைமீறி அவனுக்குத் தன்னைப்பற்றித் தெரியப்படுத்தினால் தான் தற்கொலை செய்யவும் தயங்கமாட்டேன் எனத் தெளிவாகக் கூறியிருந்தாள்.

அவசர அவசரமாக மலைநாட்டிலுள்ள ஒரு பாடசாலைக்கு தனது வேலையை இடமாற்றம் செய்து கொண்டு சென்றுவிட்டாள் பிரீத்தி.

அவளது மடலை எதிர்பார்த்து எதிர்பார்த்து ஏமாந்து போனான் சுதன்.
அவளைத் தேடி அவளது வீட்டிற்கு வந்த போதும் பெற்றோர் அவளைப்பற்றிய எந்தவித தகவலையும் கூற மறுத்துவிட்டனர்.

அவளது பிரிவு ஒருபுறமும். ஆவள் எப்படி இருக்கிறாளோ என்ற பயம் மறுபுறமும் அவனை வாட்டி எடுத்தது. ஒரு வருடமாய் எங்கெல்லாமோ அவளைத் தேடியலைந்தவன்,

இன்று ...........

தனது சொந்த விடயமாகக் கண்டிக்கு வந்திருந்தான். வீதியைக் கடக்க முனைந்தபோது ஒரு பெண் கால் இடறிக் கீழே விழுந்து விட்டாள். பக்கத்தில் சென்ற யாரோ அவளைத் தூக்கி விட்டனர்.

அவள் தனது பொய்க் காலுடன் எழுந்து மெதுவாக நடந்தாள். அதைப் பார்த்ததும் சுதன் திகைத்தான். அது…அது…அவனுடைய பிரீத்தியேதான்…….

இருவரும் மௌனமாக ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டபோது சுதன்தான் பேச்சை ஆரம்பித்தான். ஆனாலும் வாhத்தைகளை விட வேகமாக கண்ணீர்தான் ஓடிக் கொண்டிருந்தது.

“பிரீத்தி ஏனம்மா இப்படிச் செய்தாய்? நான் அப்படி என்ன பாவம் செய்தேன்.? நீதான் என் உலகம் என்று நம்பி வாழ்ந்ததுதான் நான் செய்த தப்பா? ஏன் என்னை இப்படித் தவிக்க விட்டாய்?”

“சுதன் தயவுசெய்து நிறுத்துங்கள்… உங்கள் அன்பான வார்த்தையால் என் வைராக்கியத்தை கலைத்து விடாதீர்கள்… பாவம் நீங்கள்.. ஒரு நொண்டிப் பெண்ணைக் கட்டி காலமெல்லாம எனக்காக நீங்கள் கஷ்டப்படக் கூடாது. சொந்தக் காலில் நிற்பதற்கு எனக்கு ஒரு வேலை இருக்கிறது. நான் எப்படியோ தனியாக வாழ்ந்து விடுவேன். நீங்கள் வேறொரு நல்ல பெண்ணைத் திருமணம் செய்து கொண்டு நல்லபடியாய் உங்கள் வாழ்க்கையை அமைத்துக் கொள்ளுங்கள். தயவு செய்து என்னை மறந்து விடுங்கள்.”

என்று கூறிவிட்டு நகரத் தயாரானாள்.

“நில் பிரீத்தி நான் உன்னுடன் நிறைய பேச வேண்டும். “

“மன்னித்துக் கொள்ளுங்கள் சுதன் எனக்கு வேலைக்கு நேரமாகி விட்டது.”

“பிரீத்தி எப்படி உன்னால் இப்படியெல்லாம் பேச முடிகின்றது? நான் உன்னை காதலிக்கவில்லை. உன்னோடுதான் வாழ்ந்து கொண்டிருக்கிறேன். உனக்கு எந்த ஊனமும் இருப்பதாக எனக்குத் தெரியவில்லை. அன்றும் சரி இன்றும் சரி நீமட்டும் தான் என் இதயத்தில் வாழும் தேவதை. உன்னையன்றி வேறு யாருக்கும் என்மனதில் இடமில்லை புரிந்து கொள்”

என்று உரக்க கத்தினான் சுதன்.

“சுதன் நீங்கள் கூறுவது வார்த்தைக்கு அழகாக இருக்கலாம் ஆனால் வாழ்க்கைக்கு அது சரிப்பட்டு வராது. வேண்டாம் சுதன் என்னை என் போக்கிலேயே விட்டுவிடுங்கள்”

என்று பதிலுக்கு பிரீத்தியும் கூறினாள்சுதனுக்கு என்ன செய்வதென்றே புரியவில்லை. அவன் எதைச் சொன்னாலும் அவள் தன் முடிவில் உறுதியாக இருக்கிறாளே என்று மனம் துடித்தது.

“பிரீத்தி யார் செய்த பாவமோ நாம் தமிழராக பிறந்து விட்டோம். அதனால் இந்த ஊனமெல்லாம் எமக்கு புதிதல்ல. இதைக் காரணங்காட்டி எமது வாழ்வை நாமே முடக்கிக் கொண்டால் எதிர் காலத்தில் வாழ்வதற்கு ஒரு சந்ததியே இருக்காது. காதலித்து பின் சாக்குப் போக்கு சொல்லி பிரிந்து காதலுக்கே களங்கம் கொடுக்கும் பலருக்கு முன் நாம் நல்ல காதலர்களாக வாழ்ந்து காட்ட வேண்டும். உன்னை ஒரு தேவதை போல் வைத்து காப்பாற்ற என்னால் முடியும். என்னை நம்பி எனக்காக வா பிரீத்தி”

என்று கெஞ்சினான் சுதன்.அவள் மனம் முழுக்க அன்பும் ஆசையும் இருந்தாலும் தன்னால் அவனது வாழ்க்கை பாதிக்கப்பட்டு விடுமோ என்ற பயம் மிகுதியாக இருந்தது.அவன் பேசப்பேச அவனுடனேயே சென்று விட வேண்டுமென்று மனம் துடித்தாலும் மனதைக் கட்டுப்படுத்திக்கொண்டு தொடர்ந்தாள் பிரீத்தி

“சுதன் நடந்ததை எல்லாம் கனவாக எண்ணி மறந்து விட்டு புதிதாக ஒரு வாழ்க்கையை அமைத்துக் கொள்ளுங்கள். இதுதான் நீங்கள் எனக்கு செய்யும் உதவியாக இருக்கும் “

என்று கூறிவிட்டு திரும்பிப் பார்க்காமல் நடக்கத் தொடங்கினாள்.

“பிரீத்தி நானும் போகிறேன். உன்னை விட்டு நிரந்தரமாகவே போகிறேன். தினந்தினம் உன் நினைவோடு சாவதை விட இது எவ்வளவோ மேல்…”

அவன் வார்த்தைகளை கூறி முடிப்பதற்கிடையில் பிரீத்தி அவனை நோக்கி ஓடிவர முனைந்தான். அவளது பொய்க்கால் இடறி அவள் கீழே விழ முனைந்த போது ஓடிச்சென்று தாங்கினான் சுதன்.அப்படியே நிம்மதியாக அவன் தோழில் சாய்ந்தாள் பிரீத்தி.வியாழன், 10 டிசம்பர், 2009

எனக்கு கவிதை எழுத ஆசை

எனக்கும் கவிதை

எழுதஆசை

இலக்கியம்எதுவும்கற்கவில்லை

இலக்கணம்எதுவும்அறிந்ததில்லை

மொழியின் வகைகள் புரிந்ததில்லை

ஆனாலும்
எனக்கு கவிதை எழுத ஆசை
மரபுக் கவியின் இலக்கணமோ
புதுக்கவியின் வரையறையோ
எதுவும் அறியா பாமரன் நான்
ஆனாலும்
எனக்கு கவிதை எழுத ஆசை
தமிழ் மொழியில் உள்ள
அணி அறியேன்
தொல்காப்பியம் கூறும்
யாப்பறியேன்
பழம் கவிநூல் எதுவும் கற்றறியேன்
ஆனாலும்எனக்கு கவிதை எழுத ஆசை